கும்பகோணம் பள்ளித் தீ விபத்து: பள்ளி நிறுவனருக்கு ஆயுள் தண்டனை
கும்பகோணத்தில் ஸ்ரீ கிருஷ்ணா என்ற பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்து, 94 குழந்தைகள் பலியான விபத்து குறித்த வழக்கில் அந்தப் பள்ளிக்கூடத்தின் நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்தில் 94 குழந்தைகள் பலியாகினர். 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
தஞ்சாவூர் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் புதன்கிழமையன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 21 பேரில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முகமது அலி புதன்கிழமையன்று காலை தீர்ப்பளித்தார்.
8 அதிகாரிகள், 3 ஆசிரியைகள் உள்ளிட்ட மீதமுள்ள 11 பேர் விடுவிக்கப்பட்டனர்.
தண்டனை விவரம்
பள்ளியின் நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும் அந்தப் பள்ளிக்கூடத்தின் தாளாளரும், பழனிச்சாமியின் மனைவியுமான சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலெட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆர்.பாலாஜி, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் தனி உதவியாளர் ஜி. துரைராஜ் ஆகிய 4 நான்கு கல்வி அதிகாரிகளுக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிக்கூடத்திற்குத் தரச்சான்றிதழ் வழங்கிய பொறியாளர் ஜெயச்சந்திரனுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை தவிர 51,65,700 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பொறியாளர் ஜெயச்சந்திரனுக்கு 50,000 ரூபாய் அபராதமும், கல்வித் துறை அதிகாரிகள் நான்கு பேருக்கு தலா 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதத் தொகையில் இருந்து இறந்த குழந்தைகள் குடும்பத்தினர், காயமடைந்த குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமெனவும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இந்த வழக்கில் புதன்கிழமையன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தீர்ப்பைக் கேட்பதற்காக காலை முதலே நீதிமன்ற வளாகத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோரும் உறவினரும் குழுமியிருந்தனர். பள்ளியின் நிறுவனருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும் 11 பேர் விடுவிக்கப்பட்டிருப்பதில் இவர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேல் முறையீடு செய்யப்போவதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தில் காயமடைந்து, தற்போது 18 வயதை எட்டியிருக்கும் குழந்தைகளிடம் கேட்டபோது, அவர்களும் அதிருப்தியையே வெளிப்படுத்தினர். இந்த தீ விபத்து நடந்தபோது 3 வகுப்பு படித்துக் கொண்டிருந்த மெர்சி, மாணவர்களைக் காப்பற்ற முயலாத ஆசிரியைகள் விடுவிக்கப்பட்டிருப்பது குறித்து வருத்தம் தெரிவித்தார். மற்றொரு மாணவரான விஜய்யும் 11 பேர் விடுவிக்கப்பட்டிருக்கக்கூடாது என்று கூறினார்.
தமிழக அரசின் மனு தள்ளுபடி
இதற்கிடையில், இந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு அந்தத் தருணத்தில் தமிழ்நாடு அரசு தலா ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்திருந்த நிலையில், கூடுதல் இழப்பீடு கோரி பெற்றோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2010ல் வழக்குத் தொடுக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த மனு புதன்கிழமையன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
குழந்தைகளை இழந்த பெற்றோரைப் பொறுத்தவரை, குழந்தைகளை இழந்து தவிக்கும் தங்களுக்கு கூடுதல் நிவாரணம் அளிக்க வேண்டுமென்கிறார்கள். அந்தக் குழந்தைகள் இருந்திருந்தால், தங்களைக் காப்பாற்றியிருக்கும் என்கிறார்கள் அவர்கள்.
இந்த வழக்கில் இருந்து 11 பேர் விடுவிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து, மேல் முறையீடு செய்யப்போவதாக பாதிக்கப்பட்ட பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல, தண்டனை பெற்றவர்களும் மேல் முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.
தண்டனை பெற்றவர்களில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஜெயச்சந்திரன் தவிர, மற்றவர்கள் திருச்சி சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.