iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: https://ta.wikipedia.org/wiki/விண்கலம்
விண்கலம் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

விண்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1967-லிருந்து 100-க்கும் மேற்பட்ட ருசிய சோயுசு விண்கலங்கள் மனிதர்களை விண்ணுக்கனுப்பும் பயணங்களை செய்துள்ளன, முதலில் ரசியாவின் மனிதர் செல்லக்கூடிய நிலவு ஆய்வுக்காக வடிவமைக்கப்பட்ட இவை தற்போது அனைத்துலக விண்வெளி நிலையம் செல்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
1981-லிருந்து 2011-வரை விண்-ஆய்வகம், மிர், அனைத்துலக விண்வெளி நிலையம் ஆகியவற்றின் பணிகளுக்காக, அமெரிக்க விண்ணோடங்கள் 135 முறை விண்ணுக்கு சென்று வந்துள்ளன. ("கொலம்பியா"-வின் முதல் ஏவல் காட்டப்பட்டுள்ளது)

விண்வெளிப் பயணத்திற்குப் பயன்படும் ஒரு கலன், வாகனம் அல்லது எந்திரம் விண்கலம் (Spacecraft) எனப்படும். விண்கலங்கள் பல்வேறு முக்கிய பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக தொலைத் தொடர்பு, புவி அவதானிப்பு, வானிலை ஆய்வு, தெரிமுறை செலுத்து நெறி, கோள்கள் ஆய்வு மற்றும் மனிதர்களையும் சரக்குகளையும் விண்வெளிக்கு அனுப்பவும் இவை பயன்படுகின்றன.

சுற்றுப்பாதை விண்கலங்கள் மீள்பயன்பாட்டுக்குகந்ததாகவும் இருக்கலாம்; பூமிக்குத் திரும்பிவரும் முறையைப் பொறுத்து விண்கலங்கள் இறக்கையற்ற விண்பெட்டகம் மற்றும் இறக்கையுடைய விண்ணூர்தி என வகைப்படுத்தப்படுகிறது.

தற்காலத்தில் ஒருசில நாடுகளே விண்பறப்புச் செயல்திறனைப் பெற்றுள்ளன: ருசியா (ருசிய மத்திய விண்வெளி முகமை), அமெரிக்கா (நாசா, அமெரிக்க வான்படை, ஸ்பேஸ்-எக்சு (இது ஒரு தனியார் நிறுவனம்)), ஐரோப்பிய ஒன்றியம் (ஐரோப்பிய விண்வெளி முகமை), சீன மக்கள் குடியரசு (சீன தேசிய விண்வெளி நிர்வாகம்), யப்பான் (யப்பானிய விண்வெளி ஆய்வு முகமை) மற்றும் இந்தியா (இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு). 2012 நிலவரப்படி அமெரிக்கா, ருசியா மற்றும் சீனா விண்பறப்புச் செயல்திறனை செய்துகாட்டியுள்ளன.

விண்கலம் மற்றும் விண்வெளிப் பறப்பு ஆகியவை அறிவியல் புனைவுகளில் பெரிதும் மையக்கருத்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

வரலாறு

[தொகு]
இசுப்புட்னிக் 1, முதல் விண்கலம்.

மனிதரால் ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள் இசுப்புட்னிக் 1 (Sputnik 1) ஆகும். அக்டோபர் 4, 1957 - அன்று சோவியத் யூனியனால் தாழ்நிலை புவிசுற்றுப்பாதைக்கு செலுத்தப்பட்டது. இசுப்புட்னிக் ஏவல் ஒரு தனித்த நிகழ்வாக இருப்பினும் மனித வரலாற்றில் அது ஒரு மிக முக்கியமான நிகழ்வாகும். விண்வெளி யுகம் (Space Age) என்று அறியப்படுகின்ற அதி தீவிரமான வளர்ச்சி கண்ட காலத்துக்கு இது முதல்படியாக அமைந்தது [1][2]. இக்காலகட்டத்தில் அறிவியல், தொழில்நுட்ப, இராணுவ மேம்பாடு மற்றும் ஆய்வுகள் பெரும் முக்கியத்துவம் பெற்றன. விண்வெளி தொழில்நுட்பத்தின் முதல் படியாக அமைந்ததோடல்லாமல், அதன் சுற்றப்பாதை மாறுபாடுகளை வைத்து வளிமண்டலத்தின் மேல் படலங்களின் அடர்த்தி அளவிடப்பட்டது. மேலும், அயனமண்டலத்தில் ரேடியோ அலைகளின் பரவல் பற்றிய தரவுகளையும் பூமிக்கு அனுப்பி வைத்தது. இந்த செயற்கைக்கோள் 29,000 கி.மீ./மணி வேகத்தில் பயணித்தது. புவியை 96.2 நிமிடங்களுக்கு ஒருமுறை சுற்றிவந்தது. 20.005 மற்றும் 40.002 MHz அலைவரிசைகளில் ரேடியோ சமிக்ஞைகளை வெளியிட்டது.

இசுப்புட்னிக் 1 செயற்கைக்கோள் புவியை சுற்றிவந்த முதல் விண்கலமாக இருப்பினும், அதற்கு முன்னரே மனிதர் செலுத்திய பல கலங்கள் 100 கிமீ உயரத்தை எட்டியிருக்கின்றன. பன்னாட்டு வானூர்தியியல் கூட்டமைப்பு விதிமுறைகளின்படி, 100 கிமீ உயரத்தை எட்டிய கலம் விண்வெளியில் பயணித்தது என்று கொள்ளப்படும். இந்த 100 கிமீ எல்லை, கார்மன் கோடு (Karman Line) என்று அழைக்கப்படுகிறது. அவற்றுள் முக்கியமாக 1940-களில் வி-2 ஏவுகணைகளின் சோதனை ஏவுதல்களில் பல 100 கிமீ எல்லையை தாண்டியிருக்கின்றன.

முந்தைய மற்றும் தற்கால விண்கலங்கள்

[தொகு]

மனிதர்செல்லும் விண்கலங்கள்

[தொகு]
மனிதர்சென்ற முதல் விண்கலம், வஸ்தோக் 1

2011-வரை சோவியத் யூனியன்/ரசியா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே வெற்றிகரமாக மனிதர்செல்லும் விண்கலங்களை செலுத்தியுள்ளன. இந்தியா, ஜப்பான், ஐரோப்பா (ESA) ஆகியவை மனிதர்கள் செல்லும் விண்கலங்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டிருக்கின்றன.

மனிதர் பயணித்த முதல் விண்கலம் வஸ்தோக் 1 (Vostok 1) 1961-ல் செலுத்தப்பட்டது. இதில்தான் யூரி ககாரின் பூமியை சுற்றிவந்தார். முதல் விண்வெளி வீரர் என்ற புகழ்பெற்றார். வஸ்தோக் விண்கலம் மேலும் ஐந்து விண்வெளித் திட்டங்களில் பயன்படுத்தப்பட்டது. இரண்டாவது விண்கலம் ஃபிரீடம் 7 ஆகும். 1961-ல் ஏவப்பட்ட இதில் அமெரிக்க விண்வெளி வீரரான அலன் ஷெப்பர்ட் துணை-சுற்றுப்பாதை விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். இந்த விண்கலம் 187 கிமீ உயரத்தை எட்டியது. இதைத் தொடர்ந்து மேலும் ஏழு மெர்க்குரி விண்கலங்கள் விண்வெளித் திட்டங்களில் பயன்படுத்தப்பட்டன.

விண்ணோடத்தைத் தவிர்த்து ஏனையபுவிக்குத் திரும்பும் மனிதர்செல்லும் விண்கலங்கள் யாவும் விண்பெட்டகங்கள் ஆகும்.

நவம்பர் 2000-லிருந்து மனிதர் தங்கியிருக்கும் அனைத்துலக விண்வெளி நிலையம் ஆனது, அமெரிக்கா, ருசியா, கனடா மற்றும் பல நாடுகளின் கூட்டு முயற்சித் திட்டமாகும்.

விண்ணூர்திகள்

[தொகு]
கொலம்பியா விண்ணோடம் தரையிறங்குகிறது.

மறுபயன்பாட்டுக்கு உகந்த விண்கலங்களில் சில மனிதர்செல்லும் விண்வெளிப் பயன்பாடுகளுக்கென வடிவமைக்கப்பட்டவை ஆகும், இவை விண்ணூர்திகள் என்றழைக்கப்படுகின்றன. இவ்வகை வாகனங்களில் முதலில் செயல்பாட்டில் வெற்றிகரமாக ஈடுபடுத்தப்பட்ட விண்கலம் நோர்த் அமெரிக்கன் எக்ஸ்-15 ஆகும். 1960-களில் இவ்விண்கலம் இருமுறை மனிதர்களை 100 கிமீ-க்கும் மேலான உயரங்களுக்குக் கொண்டுசென்று திரும்பியது. முதல் விண்ணூர்தியான எக்சு-15 சூலை 19, 1963 அன்று வான்-ஏவப்பட்டு துணைசுற்றுப்பாதை நிலையை அடைந்தது.

விண்ணோடம் என்றழைக்கப்பட்ட பகுதியாக மறுபயன்பாட்டுக்கு உகந்த சுற்றுப்பாதை விண்கலங்கள் அமெரிக்காவால் ஏப்ரல் 12, 1981 அன்று ஏவப்பட்டது. விண்ணோட யுகத்தில் மொத்தம் ஆறு விண்ணோடங்கள் கட்டப்பட்டன. அவற்றுள் ஐந்து விண்ணோடங்கள் விண்வெளிப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. எண்டர்பிரைசு விண்ணோடம் புவிநோக்கி திரும்பி வருதல் மற்றும் தரையிறங்குதல் போன்ற ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்பட்டது. போயிங் 747 விமானத்தின் மேலேற்றப்பட்டு வானிலிருந்து ஏவப்பட்டு அந்தச் சோதனைகள் செய்யப்பட்டன. முதன்முதலில் விண்ணுக்கு சென்ற விண்ணோடம் கொலம்பியா ஆகும். அதற்குப் பின்னர் சாலஞ்சர், டிஸ்கவரி, அட்லாண்டிசு மற்றும் எண்டெவர் ஆகியவை விண்வெளிப் பயணத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. சாலஞ்சர் விண்ணோடம் விபத்தில் அழிந்ததால் அதற்குப் பதிலாக எண்டெவர் விண்ணோடம் கட்டப்பட்டது. பிப்ரவரி 2003-ல் பூமிக்குத் திரும்புகையில் ஏற்பட்ட பெருவிபத்தில் கொலம்பியா விண்ணோடம் சிதறி அழிந்தது.

முதல் தானியங்கு பகுதி-மறுபயன்பாட்டுக்கு உகந்த விண்கலம் பியூரான் (Buran) சோவியத் யூனியனால் நவம்பர் 15, 1988 அன்று வானில் செலுத்தப்பட்டது. அந்த ஒரு பறத்தலுக்கு மட்டுமே புரான் விண்கலம் ஈடுபடுத்தப்பட்டது. மனிதர் குழு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த விண்ணூர்தி பெருமளவு அமெரிக்க விண்ணோடத்தை ஒத்திருந்தது. நிதிப் பற்றாக்குறை மற்றும் சோவியத் யூனியனின் பிளவு ஆகிய காரணங்களால் புரான் விண்கலத்தின் மேம்பாடு தடைபட்டது. பின்னர், அமெரிக்க விண்ணோடம் தேவையெனில் தானியங்கு முறையில் புவிக்குத் திரும்பும் வகையில் மாற்றி வடிவமைக்கப்பட்டது.

மனிதரற்ற விண்கலங்கள்

[தொகு]

மனிதர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு மனிதரற்ற விண்கலமாக பயன்படுத்தப்பட்டவை

[தொகு]
  • சான்ட்/எல்1 - நிலவை சுற்றிவந்த விண்பெட்டகம்
  • எல்3 - நிலவை சுற்றிவந்த விண்பெட்டகம் மற்றும் நிலவில் தரையிறங்கிய கலம்
  • டிகேஎஸ் - விண்பெட்டகம்
  • பியூரான் - சோவியத் விண்ணோடம்

பகுதி-மனிதர் சென்ற கலங்கள்: விண்வெளி நிலையங்களாக (அ) விண்வெளி நிலையத்தின் ஒரு பகுதியாக மனிதர் பயணித்த விண்கலங்கள்

[தொகு]
  • புராக்ரஸ் - மனிதரற்ற சரக்கு விண்கலம் (ரசியா)
  • டிகேஎஸ் - மனிதரற்ற சரக்கு விண்கலம் (ரசியா) மற்றும் விண்வெளி நிலையத்தின் பகுதி
  • தானியங்கு மாற்றல் வாகனம் - ஐரோப்பிய சரக்கு விண்கலம்
  • எச்-II மாற்றல் வாகனம் - ஜப்பானிய சரக்கு விண்கலம்
  • டிராகன் (விண்கலம்) - மனிதரற்ற விண்கலம் (தனியார்)

புவி சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள்

[தொகு]

சூன் 2011 நிலவரப்படி, 2000-க்கும் மேற்பட்ட விண்கலங்கள் சுற்றுப்பாதையில் இருக்கின்றன.

நிலவு தேட்டிகள் / நிலவாய்வி

[தொகு]
  • க்ளமென்டைன் (Clementine) - அமெரிக்க கடற்படை திட்டம், நிலவை சுற்றிவந்தது; துருவங்களில் ஹைட்ரஜன் இருப்பதைக் கண்டறிந்தது
  • ககுயா - ஜப்பானிய நிலவுத் தேட்டி
  • லூனா 1 - முதல் நிலவு ஆய்வுக் கலம்
  • லூனா 2 - முதல் நிலவில் மோதிய கலம்
  • லூனா 3 - நிலவின் மறுபக்கத்தின் முதல் படங்கள்
  • லூனா 9 - நிலவில் முதன்முதலில் வெற்றிகரமாக தரையிறங்கிய கலம்
  • லூனா 10 - நிலவை முதன்முதலில் முழுமையாக சுற்றிவந்த கலம்
  • லூனா 16 - மனிதரற்ற கலம் - முதன்முதலில் நிலவு மாதிரிகளைக் கொண்டுவந்தது.
  • லூனார் ஆர்பிட்டர் - மிகவும் வெற்றிகரமான நிலவு வரைபடம் உருவாக்கிய விண்கலம்
  • லூனார் ப்ராஸ்பெக்டர் - துருவங்களில் ஹைட்ரஜன் இருப்பதை உருதிப்படுத்தியது
  • லூனார் ரிகான்னசென்ஸ் ஆர்பிட்டர் - பாதுகாப்பாக தரையிறங்குதற்கான இடங்களைக் கண்டறிந்தது; தனிம வளங்களைக் கண்டறிந்தது
  • லுனோகோட் - சோவியத் நிலவு ஊர்திகள்
  • ஸ்மார்ட் 1 - ஐரோப்பிய நிலவு மோதல் கலம்
  • சர்வேயர் - நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் அமெரிக்க கலம்
  • சந்திரயான்-1 - முதல் இந்திய நிலவு ஆய்வுத் திட்டம்
'காசினி-ஹைஜென்சு விண்கலம்' சனிக்கோளின் சுற்றுப்பாதையில் நுழைவது - ஓவியரின் கற்பனை
செவ்வாய்க்கோளில் 'பீனிக்சு விண்கலம்' தரையிறங்குவது - ஓவியரின் கற்பனை

கோள்களிடை தேட்டிகள்

[தொகு]
  • அகாட்சுகி - ஜப்பானிய 'வெள்ளி' சுற்றுளவி
  • காசினி-ஹைஜென்சு - முதல் சனிக்கோள் சுற்றுளவி + அதன் துணைக்கோளான டைட்டனில் தரையிறங்கிய முதல் கலம்
  • க்யூரியாசிட்டி - 2012-ல் நாசாவினால் அனுப்பப்பட்ட செவ்வாய் நில-ஊர்தி
  • கலிலியோ - முதல் வியாழன் சுற்றுளவி + கீழிறங்கு தேட்டி
  • வைகிங் 1 - செவ்வாயில் முதன்முதலில் வெற்றிகரமாக தரையிறங்கிய கலம்

மற்றவை - தொலைதூர விண்வெளி கலங்கள்

[தொகு]
  • க்ளஸ்டர் (Cluster)
  • டீப் ஸ்பேஸ் 1 (Deep Space 1)
  • டீப் இம்பாக்ட் (Deep Impact)
  • ஜெனசிஸ் (Genesis)
  • ஹயபுசா (Hayabusa)
  • ஸ்டார்டஸ்ட் (Stardust)
  • ஸ்டீரியோ (STEREO) - சூரியனின் முழு படத்தை முதன்முதலில் எடுத்த கலம்; சூரிய ஆய்வு கலம்

அதிவேகமான விண்கலம்

[தொகு]
  • ஹீலியோஸ் I & II (Helios I & II) - சூரிய தேட்டி/ஆய்விகள் (252,792 கிமீ/மணி or 157,078 மைல்கள்/மணி)

சூரியனிலிருந்து அதிக தொலைவிலிருக்கும் விண்கலங்கள்

[தொகு]
  • பயோனிர் 10 (Pioneer 10) - 2005 நிலவரப்படி 89.7 வானியல் அலகு தொலைவில் இருந்தது; ஆண்டுக்கு 2.6 வானியல் அலகு வீதத்தில் சூரிய மண்டலத்திலிருந்து வெளியே சென்றுகொண்டிருக்கிறது.
  • பயோனிர் 11
  • வோயேஜர் 1 (Voyager 1) - சூலை 2008 நிலவரப்படி 106.3 வானியல் அலகு தொலைவில் இருந்தது; ஆண்டுக்கு 3.6 வானியல் அலகு வேகத்தில் வெளியே சென்றுகொண்டிருக்கிறது.
  • வோயேஜர் 2 (Voyager 2) - சூலை 2008 நிலவரப்படி 85.49 வானியல் அலகு தொலைவில் இருந்தது; ஆண்டுக்கு 3.3 வானியல் அலகு வேகத்தில் வெளியே சென்றுகொண்டிருக்கிறது.

நிதி ஒதுக்கீடற்ற மற்றும் நிறுத்தப்பட்ட விண்கலத் திட்டங்கள்

[தொகு]
'டெல்டா கிளிப்பர் - சோதனை (மேம்பாடு) டிசி-எக்சு.ஏ.' விண்ணூர்தியின் முதல் சோதனைப் பறத்தல், இது ஒரு முன்மாதிரி ஏவுதல் தொகுதி
மனிதர்செல்லும் விண்கலங்கள்
  • ஷுகுவாங் (Shuguang) - சீன விண்பெட்டகம்
  • சோயுசு கோன்டாக்ட் (Soyuz Kontakt) - சோவியத் விண்பெட்டகம்
  • அல்மாஸ் (Almaz) - சோவியத் விண்வெளி நிலையம்
  • மனிதர்செல்லும் சுற்றுப்பாதை ஆய்வகம் (Manned Orbiting Laboratory) - அமெரிக்க விண்வெளி நிலையம்
  • அல்டெய்ர் (Altair) - அமெரிக்க ஓரியான் விண்கலத்தின் நிலவில் இறங்கும் கலம்
பல-நிலை விண்ணூர்திகள்
  • எக்சு-20 - அமெரிக்க விண்ணோடம்
  • சோவியத் 'ஸ்பைரல் விண்ணோடம்'
  • சோவியத் பியூரான் விண்ணோடம்
  • ஐரோப்பிய 'ஹெர்ம்சு' விண்ணோடம்
  • 'கிளிப்பர்' - ரசிய 'பகுதி விண்ணோடம்/பகுதி விண்பெட்டகம்'
  • ஜப்பானிய 'ஹோப்-எக்சு' விண்ணோடம்
  • சீன ஷூகுவாங் திட்டம் 921-3 விண்ணோடம்
ஒற்றை-நிலையில் சுற்றுப்பாதைக்கு செல்லும் விண்ணூர்திகள்
  • ஐரோப்பிய 'ஹாப்பர்' சுற்றுக்கலன்
  • மெக்டொனால்டு-டக்ளசு 'டிசி-எக்சு' (டெல்டா கிளிப்பர்)
  • லாக்ஹீட் மார்ட்டின் 'வென்ச்சுர்-ஸ்டார்'

உருவாக்கம் மற்றும் மேம்பாட்டில் இருக்கும் விண்கலங்கள்

[தொகு]
ஓரியான் விண்கலன்

மனிதர்செல்லும் விண்கலங்கள்

[தொகு]

மனிதரற்ற விண்கலங்கள்

[தொகு]
  • ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் - பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கான சரக்கனுப்பும் கலன்
  • ஆர்பிட்டால் சைன்சஸ் சைக்னஸ் - பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கான சரக்கனுப்பும் கலன்
  • ஐரோப்பிய 'டார்வின்14' விண்ணாய்வி
  • சீனா - சென்சூ விண்கலன் - சரக்கு

துணை அமைப்புகள்

[தொகு]

ஒவ்வொரு பயணத் திட்டத்தின் தேவைக்கேற்றவாறு ஒரு விண்கலத்துக்கான துணை அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, பொருத்தப்படுகின்றன. விண்கலத்துக்கான பொது அமைப்பும் (Spacecraft bus) விண்கலத்தின் துணை அமைப்பாகக் கொள்ளப்படும். மேலும் பின்வருவனவற்றுள் சிலவோ அனைத்துமோ துணை அமைப்புகளில் இருக்கும்: கல இருப்பு நிர்ணயம் மற்றும் கட்டுப்பாட்டமைப்பு, வழிகாட்டமைப்பு, வழிநடத்துதல் மற்றும் கட்டுப்பாடு, தொலைத்தொடர்பு, கட்டளை மற்றும் தரவு கையாளுதல், ஆற்றல் தொகுப்பு, வெப்பக் கட்டுப்பாடு, உந்துகை மற்றும் கட்டுமானம். விண்கல பொது-அமைப்புடன், செலுத்தப்பட வேண்டிய சுமையும் இணைக்கப்பட்டிருக்கும்.

உயிர்காப்பு
இந்த அமைப்பு மனிதர் பயணிப்பதற்கு மிக முக்கியமான ஒன்றாகும்; பயணக்குழுவுக்கான உயிர் காப்பு அமைப்பு இதன் கூறாகும்.
அமெரிக்க விண்ணோடத்தின் முன்-பகுதியில் விண்கல இணக்க கட்டுப்பாட்டு அமைப்புப் பொறிகள்
கல இருப்புக் கட்டுப்பாடு
விண்வெளியில் குறிப்பிட்ட திசையில் இணக்கமாக இருப்பதற்கு கல இருப்புக் கட்டுப்பாட்டு அமைப்பு தேவையானதாகும்; மேலும், வெளிப்புற திருப்புத்திறன் மற்றும் விசைகளுக்கு விண்கலம் பதிலளிக்க வேண்டும். இவ்வமைப்பு, உணரி, செயல்படுத்தி மற்றும் கட்டுப்படுத்தும் படிமுறை ஆகியவற்றை உள்ளடக்கியது. சூரியத் தகடுகள் சூரியனை நோக்கியிருப்பதற்கும், தொலைத்தொடர்பு அமைப்புகள் பூமியை நோக்கியருப்பதற்கும், குறிப்பிட்ட அறிவியல் ஆய்வு சாதனங்கள் அவற்றிற்கான திசையை நோக்கியிருப்பதற்கும் கல இருப்புக் கட்டுப்பாடு அமைப்பு உதவுகிறது.
வழிகாட்டமைப்பு, வழிநடத்துதல் மற்றும் கட்டுப்பாடு
வழிகாட்டுதல் என்பது விண்கலம் எங்கிருக்க வேண்டும் என்பதைக் கணக்கிட்டு செலுத்துவதற்குத் தேவையான கட்டளைகளைத் தயார் செய்வதாகும். வழிநடத்துதல் என்பது விண்கலம் சுற்றுப்பாதையில் எங்கிருக்கிறது என்பதைக் கணக்கிடுவதாகும். கட்டுப்பாடு என்பது விண்கலம் எங்கு இருக்க வேண்டுமோ, அங்கு செல்வதற்கு விண்கலத்தின் பாதையில் செலுத்துவதாகும். சில திட்டங்களில், கல இருப்புக் கட்டுப்பாட்டு அமைப்பும் வழிகாட்டல், வழிநடத்தல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஒருசேர ஒரே துணை அமைப்பாகவும் ஒன்றுசேர்க்கப்பட்டிருக்கும்.
கட்டளை மற்றும் தரவு கையாளுதல்
இவ்வமைப்பு தரைக்கட்டுப்பாட்டு அமைப்பிலிருந்து வரும் கட்டளைகளை தொலைத்தொடர்பு அமைப்பிலிருந்து பெற்று, அவற்றை ஆராய்ந்து பொருத்தமான அமைப்புகளுக்கு அக்கட்டுப்பாடுகளை அனுப்புகிறது. மேலும், விண்கலத்தின் ஒவ்வொரு துணை-அமைப்புகளும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கான தரவுகளை சேமிக்கிறது; அறிவியல் ஆய்வுக் கருவிகளிலிருந்து தரவுகளைப் பெற்று தரவு சேமிப்புக் கருவியில் சேமிக்கிறது அல்லது புவிக்கு அனுப்புவதற்குத் தயார்செய்து தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டுக்கு அனுப்புகிறது. விண்கலத்தின் நேரக்கட்டுப்பாடு மற்றும் அனைத்து துணை அமைப்புகளின் செயல்படு நிலை ஆகியவற்றை இவ்வமைப்பே கையாள்கிறது.
ஆற்றல்
விண்கலத்தின் ஒவ்வொரு துணை-அமைப்புகளுக்கும் தேவையான ஆற்றலை உருவாக்குதல் மற்றும் பகிரந்தளிப்பதற்கான அமைப்பு இதுவாகும். சூரியனுக்கு அருகாமையில் இருக்கும் விண்கலங்களில், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் விதமாக சூரிய தகடுகள் அமைக்கப்பெற்றிருக்கும். தொலைதூரங்களில் இயங்கும் விண்கலங்களில், எ-டு: வியாழன் போன்ற கோள்களுக்கப்பால் இயங்குபவை, "கதிரியக்க-ஓரிடத்தான் வெப்பமின்னியற்றி"கள் பயன்படுத்தப்படுகின்றன. மின்னாற்றலானது மின்-பகிர்வமைப்புக்கு செலுத்தப்படுவதற்கு முன் மின்-நிலைப்படுத்தும் கருவி வழியாக செலுத்தப்படுகின்றது; அதன்பின்னர், விண்கலத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் மின்-பகிர்வுத் தொகுதியின் மூலம் மின்னாற்றல் பிரித்தளிக்கப்படுகிறது. மேலும், மின்-பகிர்வுப் பொதுவமைப்போடு மின்கலங்கள் இணைக்கப்பட்டிருக்கும். முதன்மை மின்னியற்றி-வழியே மின்னாற்றல் கிடைப்பது தடைபடும்போது, எ-டு: தாழ்புவி சுற்றுப்பாதையில் இருக்கும் விண்கலங்கள் புவியின் நிழல்புறத்துக்கு செல்லும்போது, இம்மின்கலங்கள் விண்கலத்துக்கான மின்னாற்றலை அளிக்கின்றன.
வெப்பக் கட்டுப்பாடு
புவியின் காற்றுமண்டலத்திலிருந்து விண்வெளிக்கு இடம்பெயர்தலை தாங்கும் வகையில் விண்கலங்கள் வடிவமைக்கப்படவேண்டும். நூற்றுக்கணக்கான செல்சியசு வெப்பநிலை வேறுபாட்டைக் கொண்டிருக்கும் வெற்றிடம் முதற்கொண்டு, (விண்கலங்களின் மீள்நுழைவின் போது) பிளாஸ்மாக்கள் வரை விண்கலங்கள் எதிர்கொள்ளும். வெவ்வேறு வகையான கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன: அதிக உருகுநிலை மற்றும் குறைந்த அடர்த்தி கொண்ட பொருட்கள் (எ-டு: பெரில்லியம், வலுவூட்டப்பட்ட கார்பன்-கார்பன்) அல்லது அதிக அடர்த்தி இருப்பினும் குறைந்த தடிமன் கொண்ட பொருட்கள் (எ-டு: டங்ஸ்டன், வெப்ப-நீக்க கார்பன்-கார்பன் கூட்டமைப்பொருள்). பயணத்திட்டத்தைப் பொருத்து விண்கலமானது வேறு கோளின் நிலப்பகுதியில் இயங்க வேண்டியும் இருக்கலாம். கட்டமைக்கத் தேர்ந்தெடுக்கப்படும் பொருட்களின் கதிரியக்கத் தன்மைகளைப் பொருத்து "வெப்பக் கட்டுப்பாட்டுத் துணை-அமைப்பானது" முனைப்பற்ற தன்மையினதாக இருக்கலாம். முனைப்பு வெப்பக் கட்டுப்பாட்டமைப்புகள் மின் வெப்பமூட்டிகளைப் பயன்படுத்தலாம்; குறிப்பிட்ட விண்கலப்பகுதிகள் குறித்த வெப்பநிலை வீச்சில் இயங்கும்-படியாக இருப்பின் அவ்வாறு வெப்பநிலையை சரிபடுத்தும் அமைப்புகளோடு அவற்றுக்கான செயல்படுத்திகளும் பொருத்தப்பட்டிருக்கும்.
உந்துகை
விண்கல பயணத் திட்ட விவரத்தினைப் பொருத்து விண்லமானது, உந்துகை அமைப்புடனோ அல்லது இல்லாமலோ செய்யப்பட்டிருக்கும். ஆனால் பொதுவாக, தாழ்-புவி சுற்றுப்பாதையில் இருக்கும் விண்கலங்கள் தமது உயரத்தை மாற்றவும், புவிநோக்கிய சாய்வை மாற்றவும் உந்துகை துணைத் தொகுதி பயன்படும். உந்துகை துணை-அமைப்பின் பொதுவான பகுதிகள்: எரிபொருள், தேக்கிகள், தடுப்பிதழ்கள், குழாய்கள் மற்றும் உந்து பொறிகள். வெப்பக் கட்டுப்பாட்டு அமைப்பானது உந்துகை துணை-அமைப்போடு இணைந்து செயல்படும்: உந்துகை அமைப்பின் வெவ்வேறு பகுதிகளின் வெப்பநிலைகளை கண்காணிப்பதோடு, விண்கலத்தின் இயங்குதிசை-மாற்ற இயக்கத்துக்கு எரிபொருள் தேக்கி மற்றும் உந்துபொறிகளை முன்கூட்டியே வெப்பமூட்டுகிறது.
கட்டுமானம்
ஏவூர்தி புறப்படும்போது ஏற்படும் மிக-அதிகமான சுமைகளைத் தாங்கும் வகையில் விண்கலங்கள் வடிவமைக்கப்படவேண்டும், மேலும் விண்கலத்தின் வெவ்வேறு பகுதிகளும் ஒன்றாக இணைந்திருக்கும் வண்ணம் கட்டுமானம் இருக்க வேண்டும். மேலும் பயணத் திட்டத்தைப் பொருத்து விண்கலமானது, வேறு கோளின் வளிமண்டலத்துக்குள் நுழையும் போதும் அதன் நிலப்பரப்பின் இறங்கும் போதும் ஏற்படும் சுமையையும் தாங்குமாறு கட்டுமானம் வடிவமைக்கப்படும்.
தாங்குசுமை
பொதுவாக பயணத் திட்டத்தைப் பொருத்து தாங்குசுமை வேறுபடும். வழமையான தாங்குசுமைகள்: அறிவியல் உபகரணங்கள் (படம்பிடி கருவிகள், தொலைநோக்கிகள், துகள் கண்டுணரிகள், மேலும்பல), விண்வெளிநிலையத்துக்குத் தேவையான சரக்குகள் அல்லது மனித பயணக்குழு.
தரைக்கட்டுப்பாட்டமைப்பு
விண்கலத்தின் ஒரு பகுதியாக இல்லையெனினும், விண்கலத்தின் சிறப்பான இயக்கத்துக்கு மிக முக்கியமான ஒரு பகுதியாகும். பயணத் திட்டத்துக்கேற்றவாறு விண்கலத்தை இயக்குதல், தரவு முறைவழியாக்கல் மற்றும் சேமிப்பு வசதி, விண்கலத்துக்கு மற்றும் விண்கலத்திலிருந்து சமிக்ஞைகளை அனுப்பிப் பெறுதல், வெவ்வேறு திட்ட கட்டுப்பாட்டு அமைப்புகளோடு ஒலி மற்றும் தரவு தொலைத்தொடர்பு வசதிகள் இதன் அம்சங்களாகும்.
ஏவூர்தி
ஏவூர்தியானது விண்கலத்தை தரையிலிருந்து கிளப்பி, வளிமண்டலம் வழியாக, அதற்கான சுற்றுப்பாதைக்கு எடுத்துச் செல்கிறது. விண்கலத்துக்கான சுற்றுப்பாதை அந்த விண்கலத்தின் பயன்பாட்டைப் பொருத்து நிர்ணயிக்கப்படும். அந்த ஏவூர்தி மறுபயன்பாட்டுக்கு உகந்ததாகவோ அல்லது ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படுவதாகவோ இருக்கலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Walter A. McDougall[தொடர்பிழந்த இணைப்பு] "Shooting the duck," American Heritage, Winter 2010.
  2. ". . .On October 4, 1957 Sputnik I shot into orbit and forcibly opened the Space Age." Swenson, L, Jr, Grimwood, J. M. Alexander, C.C. ¶¶¶ 66-62424

மேலும் பார்க்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்கலம்&oldid=3295743" இலிருந்து மீள்விக்கப்பட்டது