iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: https://ta.wikipedia.org/wiki/பலிபீடம்
பலிபீடம் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

பலிபீடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டைக் கிரேக்க பலி பீடத்தின் மீது பலி செலுத்துதலின் சித்தரிப்பு. காலம் கி.மு 480
ஆசுதிரியாவில் உள்ள கெல்ட்டியர்களின் பலிபீடம்

பலிபீடம் என்பது சமயக் காரணங்களுக்காகப் பலிகளைக் காணிக்கையாகச் செலுத்தும் இடமாகும். கோயில்களிலும், தேவாலயங்களிலும் மற்றும் பிற வழிபாட்டிடங்களிலும் பலிபீடங்கள் காணப்படலாம். இன்று கிறித்தவம், பௌத்தம், இந்து சமயம், சிந்தோ, தாவோயியம் முதலிய பல சமயங்களில் பலிபீடம் பயன்படுத்தப்படுகின்றது. யூத சமயத்தில் முற்காலத்தில் பலிபீடமும் பலிசெலுத்துதலும் இருந்தாலும் இரண்டாம் கோவிலின் அழிவுக்குப் பின்பு பலிசெலுத்துதல் இல்லாமல் போனது.

கடவுளுக்குப் பலி செலுத்தும் வழக்கம் பண்டையக் காலம் முதலே இருந்துள்ளது. பலியானது திராவிடர் பண்பாட்டில் படையல் என்று அழைக்கப்பட்டது. காய்கறி, கனிவகைகள், சமைக்கப்பட்ட உணவு மற்றும் மிருகங்களைப் பலியிடுவதும் இன்றளவும் பல சமயங்களில் உள்ளது. நரபலி (மனித பலி) கொடுக்கும் வழக்கம் மனிதர்களிடையே முற்காலத்தில் இருந்தாலும் தற்போது பெரும்பான்மையாக இல்லை.

இந்து சமயத்தில்

[தொகு]
இந்து சமய பலிபீடம்

பலிபீடம் இந்து சமயக்கோயில்களில் கொடிமரத்திற்கு அருகே அமைக்கப்படுகிறது. ஆணவம், கன்மம், மாயை என்னும் மூவகை அழுக்குகளையும் களைந்த பின்பே இறைவனை அடைய இயலும் என்ற தத்துவத்தினை உணர்த்துவதற்காக இப்பீடங்கள் கோயில்களில் அமைக்கப்படுகின்றன.[1]

கிறித்தவத்தில்

[தொகு]
ஒரு கிறித்தவ கோவிலில் பலிபீடம் அர்ப்பணிக்கப்படுகிறது. இடம்: ஆத்திரேலியா

கிறித்தவ சமயத்தில் விலங்குகளைப் பலியிடும் வழக்கம் இல்லை. கடவுளுக்குச் செலுத்தப்படுகின்ற வழிபாடாக நற்கருணைக் கொண்டாட்டம் கத்தோலிக்கம், மரபு வழி திருச்சபை, ஆங்கிலிக்க சபை, லூதரன் சபை, பாப்திஸ்து சபை போன்ற பல கிறித்தவ சபைகளில் நிகழ்கிறது. அந்த வழிபாட்டின்போது அப்பமும் இரசமும் கடவுளுக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படும். இக்கொண்டாட்டத்தின்போது அப்பம், இரசம் ஆகிவற்றின் வடிவில் இயேசுவின் உடலும் இரத்தமும் உணவாகவும் பானமாகவும் அருந்தப்படுகின்றன. கல்வாரி மலையில் சிலுவையில் உயிர்துறந்து இயேசு பலி ஒப்புக்கொடுத்தார் என்றும், அந்த இரத்தப் பலியானது இரத்தம் சிந்தாத விதத்தில் நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது நிகழ்கிறது என்றும் கிறித்தவம் நம்புகிறது.

இவ்வாறு நிகழ்கின்ற நற்கருணைக் கொண்டாட்டம் உண்மையிலேயே ஒரு பலி ஆகும் என்பது கத்தோலிக்க கிறித்தவ சபையின் கொள்கை. மரபு வழி சபையும் இக்கொள்கையைக் கொண்டுள்ளது. சில புராட்டஸ்தாந்து சபைகள் நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது பலி என்னும் கருத்தை வலியுறுத்தாமல், காணிக்கை செலுத்துதல், கடவுளின் வார்த்தையைப் பறைசாற்றுதல் என்னும் கருத்தை அதிகமாக வலியுறுத்துகின்றன. பலிபீடத்தின் மீது அப்பமும் இரசமும் வைக்கப்படும். இறைவேண்டல்கள் நிகழும். விவிலியப் பாடங்கள் வாசிக்கப்பட்டு விளக்கப்படும். கூடியிருப்போர் இறைபுகழ் பாடல்களும் பாடுவர். நற்கருணை விருந்தில் பங்கெடுப்பர்.

ஆதாரங்களும் மேற்கோள்களும்

[தொகு]
  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=14853 தினமலர் கோயி்ல்கள் பலிபீடம் எதற்காக?
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலிபீடம்&oldid=3701098" இலிருந்து மீள்விக்கப்பட்டது