குன்மிங் (Kunming, ) தென்மேற்கு சீனாவில் உள்ள மாகாணம் யுன்னானின் தலைநகரமும் அம்மாகாணத்திலுள்ள மிகப்பெரிய நகரமும் ஆகும். [5] 1920கள் வரை யுன்னான்-ஃபு என அறியப்பட்ட இந்த நகரம் இன்று மாவட்ட நிலையில் மாகாணத்தின் அரசியல், பொருளியல், தொலைத்தொடர்பு மற்றும் பண்பாட்டு மையமாக விளங்குகின்றது. மாகாண அரசு இங்கிருந்தே செயல்படுகின்றது. இங்கு நிலவும் வானிலை காரணமாக வசந்த நகரம் என அழைக்கப்படுகின்றது. இரண்டாம் உலகப் போரின் போது சீனப் படை மையமாகவும், அமெரிக்க வான்படை தளமாகவும், பர்மா சாலையின் போக்குவரத்து முனையமாகவும் விளங்கியது. யுன்னான்-குய்சோ சமவெளியின் நடுவில் கடல்மட்டத்திலிருந்து 1,900 மீட்டர்கள் (6,234 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இதன் நிலநேர்க்கோடுகடக ரேகைக்கு சற்றே வடக்கே உள்ளது. 2014ஆம் ஆண்டில் குன்மிங்கின் மக்கள்தொகை 6,626,000 ஆகவிருந்தது; இதில் நகர்ப்புற மக்கள்தொகை 4,575,000,[6] பெரிய டியான் ஏரியின் வடக்கெல்லையில் அமைந்துள்ள இந்நகரினைச் சுற்றிலும் கோவில்களும் ஏரிசார் சுண்ணக்கல் குன்றுகளும் அமைந்துள்ளன.