இலங்கையின் உலர்வலய என்றும் பசுமையான காடுகள்
Onda kota இலங்கையிற் காணப்படும் அயன மண்டலக் காடுகளின் உலர் வலயங்களில் அமைந்த காடுகளாகும். இச்சூழலியற் பகுதி 48,400 சதுர கிலோமீற்றர் (18,700 சதுர மைல்) பரப்பளவில் இலங்கைத் தீவின் தென்மேற்குப் பகுதியும் மத்திய மலைநாட்டுப் பகுதியும் யாழ்ப்பாணத் தீபகற்பமும் தவிர்ந்த இலங்கையின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கியதாகும். தென்மேற்கு மற்றும் மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலேயே இலங்கையின் தாழ்நில மழைக்காடுகள், இலங்கையின் மலைசார் மழைக்காடுகள், இலங்கையின் மலைப்பாங்கான மழைக்காடுகள் ஆகிய சூழலியற் பகுதிகள் காணப்படுகின்றன. இலங்கைத் தீவின் வடக்கே அமைந்துள்ள யாழ்ப்பாணத் தீபகற்பம் தக்கிண ஊசியிலைக் காடுகள் எனும் சூழலியற் பகுதியைச் சேர்ந்ததாகும்.
தாவரங்கள்
[தொகு]இலங்கையின் உலர்வலய என்றும் பசுமையான காடுகளில் காணப்படும் தாவரங்களின் இலைகள் உண்மையிலேயே என்றும் பசுமையாகக் காணப்படுகின்றன. இந்நிலை இங்குள்ள தாவரங்கள் அயன மண்டலப் பகுதிகளிலுள்ள ஏனைய உலர் காடுகளில் காணப்படும் அகன்ற இலைத் தாவரங்களிலும் பார்க்க நன்கு பசுமையாயிருப்பதைப் புலப்படுத்தும். இக்காடுகள் இந்தியாவின் தென்கிழக்குக் கரையோரமாகக் காணப்படும் கிழக்கு தக்கிண என்றும் பசுமையான உலர் காடுகள் கொண்டுள்ள இயல்புகள் பலவற்றை ஒத்துள்ளன. இக்காடுகளில் பொதுவாக வளரும் பெரிய மரங்களில் முதிரை, கருங்காலி, பாலை போன்றன பொருளாதார நலன்கள் பலவற்றைத் தருகின்றன.
விலங்குகள்
[தொகு]இக்காடுகளிலேயே இலங்கையிற் காணப்படும் பெரிய விலங்குகளான இலங்கை யானை, இலங்கைச் சிறுத்தை, புள்ளி மான் போன்றன அனேகமாக வாழ்கின்றன. இலங்கையிற் காணப்படும் உடும்பு இனங்களில் பலவும் சருகு மான்களும் வரி முயல்களும் காட்டுக் கழுதைகளும் இக்காடுகளில் ஏராளம். மழைக்காடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் உலர்வலய என்றும் பசுமையான காடுகளில் காணப்படும் பெரிய தாவரங்களுக்கு இடையிலான தூரம் கூடுதல் என்பதால் அவ்விலங்குகள் சுதந்திரமாகத் திரியக்கூடியதாக உள்ளது.