செயற்கைக்கோள் சூரிய முடக்கம்
செயற்கைக்கோள் சூரிய முடக்கம் (satellite solar outage or sun outage) என்பது செயற்கைக்கோள் வழி தொலைத்தொடர்பில் குறிகைகளைப் (சமிக்ஞைகளை) பெறவிடாதபடி இடையூறு ஏற்படுத்தும் இயற்பியல் நிகழ்வாகும். இந்நிகழ்வின்போது குறிகைகள் முற்றிலுமாகத் தடுக்கப்படலாம் அல்லது வலுகுறைந்து நலிவடையலாம். குறைந்த நேரமே நீடிக்கும் இந்நிகழ்வை எப்போது, எங்கே நிகழும் என்பதை முன்கூட்டியே கணிக்க இயலும். இத்தகைய சூரிய முடக்கமானது எல்லா செயற்கைக்கோள்களையும் வானொலித் தொலைத்தொடர்பையும் பாதிக்கும் என்றாலும், செயற்கைக்கோள் வழி தொலைக்காட்சி ஒளி(லி)பரப்பைப் பாதிப்பதால் பரவலாக அறியப்பட்ட ஒன்றாகத் திகழ்கிறது.[1]
ஏன் நிகழ்கிறது
[தொகு]ஆற்றல்வாய்ந்த அகலப்பட்டை நுண்ணலை மூலமான சூரியன் செயற்கைக்கோளுக்கு நேர்பின்னே (புவியிலிருந்து பார்க்கும்போது) கடந்துசெல்லும்போது அலைவாங்கியானது செயற்கைக்கோள் குறிகைகளுடன் சேர்த்து சூரியனிலிருந்து வரும் நுண்ணலை மாசுவையும் ஏற்கிறது. இதனால் ஏற்படும் குறுக்கீட்டின் அளவைப் பொறுத்து சிறிய அளவிலான குறிகை சிதைவு அல்லது முழு இழப்பு ஏற்படலாம்.[1]
எப்போது, எங்கு நிகழ்கிறது
[தொகு]எந்த நாள், எந்த நேரத்தில் எவ்வளவு காலத்துக்கு இந்த இடையூறு இருக்கும் என்பது பின்வரும் காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது:
- அலைவாங்கியின் அமைவிடம்
- குறிப்பிட்ட செயற்கைக்கோளின் அமைவிடம்
- அலைவாங்கியின் கற்றையகலம்
- புவியிலிருந்து பார்க்கும்போது சூரியனின் தோன்றுநிலை ஆரம்
- அலைவாங்கி செயற்கைக்கோளை நோக்கித் திரும்பியிருப்பதின் துல்லியம்.
புவிநிலை செயற்கைக்கோள்களைப் பொறுத்தவரை தொடர்ந்து சில நாட்களுக்கு தினமும் சில நிமிடங்கள் சூரிய முடக்கத்தால் இடையூறு ஏற்படலாம்.[1]
பங்குச் சந்தை செயல்பாட்டில் பாதிப்பு
[தொகு]சில ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு சூரிய முடக்கம் ஏற்படும் நாட்களில் இந்திய பங்குச் சந்தையின் செயல்பாடுகள் 40 நிமிடங்கள் வரை நிறுத்திவைக்கப்பட்டது உண்டு. மிகச் சிறிய துளை முனையங்கள் (VSAT) வழி மட்டுமே பங்கு வணிகம் தொடர்பான தகவல் பரிமாற்றம் நடந்துவந்ததால் இவ்வாறு நேரிட்டது. ஆனால் இணையம், குத்தகை இணைப்பு போன்ற பிற வசதிகள் வந்துவிட்டபிறகு இவ்வாறு நிறுத்திவைக்கப்படுவதில்லை.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Ian Poole. "Satellite solar outage or sun outage". Radio-Electronics.com. Archived from the original on 2015-09-10. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 4, 2015.
- ↑ "Sun outage: NSE not to suspend trading next month". தி இந்து பிசினஸ்லைன். பிப்ரவரி 26, 2013. http://www.thehindubusinessline.com/markets/sun-outage-nse-not-to-suspend-trading-next-month/article4455885.ece. பார்த்த நாள்: அக்டோபர் 4, 2015.